தலைவி பட சர்ச்சை - பதில் சொல்வாரா தலைவா இயக்குநர்?

தலைவா படத்திற்கு தலைவியால் சர்ச்சை. இப்போது தலைவி படத்திற்கு யாரால் சர்ச்சை?



தலைவி படம் குறித்து பல விதமான சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. இயக்குநர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதாவின் வரவாற்றை திரிக்கிறார், புனைவு என்ற பெயரில் எம்.ஜி.ஆர்.-ஐ அவமதித்துள்ளார், நடக்காத நிகழ்வுகளை நடந்ததுப்போல சித்தரித்துள்ளார், ஆர்.எம்.வீரப்பனை முழுவதுமாக ஜெயாவுக்கு வில்லனாக காண்பித்து உண்மைக்கு புறம்பாக படத்தை எடுத்துள்ளார் என்று பல விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.




முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு கொடுத்த பேட்டியில் கூறும்போது, எம்ஜிஆர் என்றைக்குமே பதவிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது. 1967-ல் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டடிப்பட்ட எம்ஜிஆரின் போஸ்டர்கள் பட்டிதொட்டியெங்கும் ஒட்டப்பட்டு திமுக மிகப்பெரிய வெற்றியைப்பெற எம்ஜிஆர் காரணமாக இருந்தார். அப்போது அண்ணா அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தபோது எம்ஜிஆர் மறுத்து நான் நடிகராகவே இருக்கிறேன் என்று ஒதுங்கிக் கொண்டார். அவரை மரியாதை செய்யும் விதமாக சிறுசேமிப்புத் திட்ட தலைவர் பதவியை உருவாக்கி அண்ணாவே கொடுத்தார். எம்ஜிஆர் கேட்கவில்லை, அண்ணாவே கொடுத்தார்.

 ஆனால் அண்ணா மறைவுக்குப்பின் முதல்வர் பதவிக்கு நெடுஞ்செழியனா? கருணாநிதியா என்ற சர்ச்சை வந்தபோது எம்ஜிஆர் கருணாநிதி பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தார். அதனால்தான் கருணாநிதியே முதல்வர் ஆனார். இதுதான் உண்மை. 


    ஆனால் எம்ஜிஆர் ஏதோ அமைச்சர் பதவி கேட்டது போலவும், கருணாநிதி தர மறுத்ததுபோலவும் ஒரு காட்சி பதிவாகியுள்ளது. அது உண்மையல்ல, அதை நீக்க வேண்டும். எம்ஜிஆர் ஏன் திமுகவை விட்டு வெளியில் வந்தார்? கணக்குக்கேட்டு வெளியில் வந்தார் அதை மறைத்து அமைச்சர் பதவி கேட்டு தராததுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தவறான ஒன்று நீக்கவேண்டும். அதேப்போல் தனக்குப்பின் ஜெயலலிதா தான் என்று எம்ஜிஆர் எங்களுக்கு எல்லாம் காட்டிவிட்டுச் சென்றார். எம்ஜிஆர் எந்த காலத்திலும் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தியதே இல்லை. 


ஆனால் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டி எம்ஜிஆர் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு ஜெயலலிதாவுக்கும் சொல்லிவிட்டு, ஒரு நாய்க்கும் வணக்கம் சொல்வதுபோல் காட்சி அமைத்துள்ளார்கள்.அது நீக்கப்பட வேண்டும். ஏனென்றால் அப்படி நடக்கவே இல்லை. அது ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போல் அமைந்துள்ளது. அதேபோல் ஷூட்டிங் நடக்கும்போது எம்ஜிஆர் வருவார் அனைவரும் எழுந்து நிற்பார்கள் ஜெயலலிதா கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று காட்சி அமைத்துள்ளார்கள் அதை நீக்கவேண்டும். அது பார்ப்பவர்கள் மனதில் தவறாக பதிவாகும். இவையெல்லாவற்றையும் நீக்கினால் படம் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


அதேப்போல திமுகவைச் சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தன் முகநூல் பக்கத்தில், தமிழில் ‘பயோபிக்’ படம் என்கிற போர்வையில் வெளிவந்திருக்கும் “தலைவி” திரைப்படம் ஜெயலலிதாவின் உண்மையான வாழ்வைச் சித்தரிக்கிற மாதிரி அமைந்திருக்கிறதா?


ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை எடுத்ததனாலேயே அது தான் உண்மை என்றாகிவிடாது என்பதை உணர்த்தியிருக்கிறது இந்தத் திரைப்படம்.


‘க்யூன்” என்கிற ஜெயலலிதாவைப் பற்றி வெளிவந்த வெப்சீரியலில் இருக்கும் உண்மையின் சாயல் கூட, “தலைவி” படத்தில் இல்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயாவைத் தாக்கிக் கீழே போட்டு மிதிக்கிற மாதிரியான காட்சி ஒன்றே போதும் உதாரணத்திற்கு. அன்றைக்கு உண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த காட்சிகள் பதிவாகியிருக்கிறதா படத்தில். முதல்வராக இருந்த கலைஞரை உரையைக் கூடப்படிக்க விடாமல், அவரைப் படுத்தி, அவருடைய மூக்குக் கண்ணாடியை உடைத்து, சட்டமன்றத்தைக் களேபரமாக ஆக்கியது யார் என்பது அரசியல் பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.


ஆனால் “தலைவி” திரைப்படத்தில் மகாபாரத பாஞ்சாலி சபதம் மாதிரி சட்டமன்றம் முன்பு வீராவேசமான வசனம் ஒன்றைத் தலைவிரி கோலத்தில் பேசுகிறார் ஜெயா. அதிலிருந்து துவங்கும் திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை, கலைஞரையும் , ஆர்.எம்.வீரப்பனைத் தவறாகச் சித்தரிக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆர் வாழ்ந்தபோதே கட்சிக்கூட்டணி பற்றிப் பேசும் அதிகாரம் அவரிடம் இருந்ததைப் போன்ற காட்சிகள் கூட இருக்கின்றன.


ஒரு பெண் திரைத்துறைப் பின்புலத்திலிருந்து அரசியலுக்கு வந்து எத்தனை சிரமங்களுக்குப் பிறகு வெற்றியைத் தொடுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவது தான் படத்தின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் அவருடன் அரசியலிலும், திரைத்துறையிலும் கூடவே பயணித்த யாரையும் புண்படுத்தும்  விதத்திலும் இருக்கக் கூடாது என்பது படத்தை இயக்கியவர்களுக்குத் தெரிய வேண்டாமா?


“பாரதி”யின் வாழ்வைப் பிரதிபலிக்கும் திரைப்படம் “பாரதி”, “கப்பலோட்டிய தமிழன்” போன்ற திரைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


அறம் இணைய இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணன் எழுதியுள்ள கட்டுரையில், இதைவிட கேவலமாக சமகால வரலாறை படமாக்க முடியாது. அதிமுகவினரே இந்த படத்தை ஏற்கமாட்டார்கள்! ஜெயலலிதாவை மிகைப்பட உயர்த்தி சொல்ல வேண்டும் என நினைப்பது தவறல்ல. ஆனால், அதற்காக அவரைத் தவிர அவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் – எம்.ஜி.ஆர் உட்பட – டம்மியாக்கி இருக்க வேண்டியதில்லை.



 படம் ஒரு சில இடங்களில் அரைகுறை உண்மைகளை பேசுகிறது! அரைகுறை உண்மை மிக ஆபத்தானது! இதற்கு உதாரணம் சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்படும் காட்சியாகும்! இன்னும் பல இடங்களில் அப்பட்டமாக வலிந்து பொய் பேசுகிறது! சத்துணவு திட்ட அமலாக்கம் தொடங்கி எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் அவரது சடலம் இருந்த ராணுவ வண்டியில் ஐந்தாறு தலைவர்கள் ஏறி நின்று கொண்டு, ஜெயலலிதா ஏறுவதை மட்டும் தடுத்தாகவும் காட்டப்படுவது வரை அளவில்லா பொய்கள்!


பொய் அருவருக்கதக்கது, ஆபாசமானது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை! அந்த பொய் ஒவ்வொன்றையும் தோலுரித்து தோரணம் கட்டி போடத் தோன்றுகிறது! ஆனாலும், இந்தப் படம் குறித்து இவ்வளவு மெனக்கெட்டதே அதிகம் என்றும் தோன்றுகிறது! என்று முழு நீள கட்டுரையை எழுதியுள்ளார். 

முழுமையாக வாசிக்க: https://aramonline.in/6032/thalaivi-cinima-jayalalitha-mgr-rmv/

ஆக மொத்தம் விமர்சன ரீதியில் இந்தப் படம் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படம் என சொல்லி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. பயோபிக் என்றால் ஏன் பெயர்களை மாற்ற வேண்டும்? உண்மைக்கு புறம்பான கதையை, கதைக்களத்தை அமைக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. இவை அனைத்திற்கும், இந்தப் படத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய் நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.


- ப.சு.ராகவேந்திரன்,

OH Tamil Digital Media





Comments

Popular posts from this blog

டாக்டர் - ஒரே நாளில் ரூ.8.50 கோடி வசூல்! வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு

ஓடிடியில் ஆங்கராகும் மீம்ஸ் நாயகன் வைகைப்புயல் வடிவேலு