சீச்சீ... காதலா? - psragav
சீச்சீ... காதலா?
அந்த கெட்ட பழக்கமெல்லாம் எனக்கு இல்லைங்க... எங்க அப்பா அம்மாவுக்கு
துரோகம் பண்ணமாட்டேன் என்று யாரேனும் சொல்லியதை கேட்டதுண்டா? உங்களிடம் யாராவது “நீங்க
லவ் பண்றீங்களா”என்றாவது கேட்டதுண்டா? அப்படி கேட்டிருந்தால், உங்கள் பதில் என்னவாக
இருந்திருக்கும்? (கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க)
லவ்
பண்ணிருக்கிங்களா? என்ற கேள்விக்கு, ச்சேச்ச… அந்த மாதிரி எண்ணமே வந்தது கிடையாது என்று சமீபத்திய தொலைக்காட்சி பேட்டியில் முதலமைச்சர் பழனிசாமி
கூறியிருந்தார். ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.
இங்கு அவரைப் போலவே பலரும் உள்ளனர். ஆம்.. காதல் என்றாலே ஏதோ தகாத
சொல் போல கசந்து கொள்ளும் பெற்றோர்களுக்கு மட்டும்தான் தெரியும், காதல் தவறான செயல்,
ஒழுக்கமற்றது என்று. காதல் என்ற வார்த்தையை சொன்னாலே, என்ன இவன் அசிங்கமா, கேவலமா பேசுறான்
என்றெல்லாம் என் ஊர்க்காரர்களும் உறவுக்காரர்களும் வேதனைப் படுவதை பார்த்திருக்கிறேன்.
ஏன் இவர்களுக்கு இவ்வளவு கோபம், வெறுப்பு என ஆராய்ந்த போது முதல் காரணியாக “தங்கள்
மகன்/மகள் காதலிப்பதால், பெற்றவர்கள் வள்ர்ப்பு சரியில்லை என்று யாரேனும் சொல்லிவிடுவார்களோ”
என்ற அச்சமே என்பதே தெரிகிறது. அச்சம் என்பதைவிட பெரும் அவமானமாக கருதுகிறார்கள். இரண்டாவது, சாதி என்னும் காரணி, இவை எல்லாவற்றையும் விட மூன்றாவதாய் பணம், அந்தஸ்து முக்கிய காரணியாக
பார்க்கப்படுகிறது.
இவை மூன்றையும் முறியடித்து, காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சி போட்டப்
பிறகுதான் தங்கள் காதல் நிறைவேறியதாகவும், வெற்றி கண்டுவிட்டதாகவும் நினைத்து சிலர்
வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இதுதான் உண்மையான காதல் என்று சொல்வதும்
மூடத்தனமே. முதலில் காதல் என்பது யாது என்று நன்கு ஆராய்ந்து, உண்மை காதல் எது?, பொய்யான
காதல் எது?, கள்ளக்காதல் எது? என்பதை பற்றியெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்.
காதல் பண்றானம்ல… காதலு… படிச்சு பாஸ் மார்க் எடுக்க துப்பில்ல, பொம்பல
சோக்கு கேக்குதோ… இன்னும் நிறைய வசை சொற்களை கேட்டிருக்கிறேன். அட என்னைய இல்லப்பா!
எங்க ஊருல காதல் வயப்பட்ட இளைஞர்கள அவங்க பெற்றோர்கள் இப்படிதான் திட்டுவாங்க. ஆனாலும்
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம “பேசுறவங்க வாய்
ஆயிரம் பேசும், அவங்களுக்காக என் முடிவ நான் ஏன் மாத்திக்கணும்?, என் வாழ்க்கைய நான்
தான் முடிவு பண்ணுவேன், வேற யாரும் தலையிடக் கூடாது”அப்படி இப்படின்னு வசனம் பேசிட்டு
எத்தனை பேரு இன்னும் தன்னோட காதல் பயணத்த தொடர்ந்துட்டு இருக்காங்க ன்னு நீங்களே பார்த்திருப்பிங்க.
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதுதான்
காதல் என்றால், அதற்கு வேறு பெயர் வைத்துவிடுவது நல்லது என்பேன். காதல் என்பது அது அல்ல. அன்பை வெளிப்படுத்துவது. அக்கறையாய் நடந்துக்கொள்வது. காதல் யார் மீதும் வரும். அதை கொச்சப்படுத்தக்கூடாது. காதல் வேறு, காமம் வேறு என்ற வேறுபாடு அறிந்தால் இங்கு காதல் என்ற சொல் கசக்காமல் எல்லோருக்கும் இனிமையானதாகவே இருக்கும். அதனால் காதல் என்பதன் பொருளை புரிந்துக்கொள்ள முயற்சி செய்வோம். ஆம், இங்கு பலருக்கும் காதலின் அர்த்தம்
தெரியாமல், தெரிந்துக்கொள்ள விருப்பமும் இல்லாமல்தான் இருக்கிறார்கள்.
---------தொடரும்--------





மூன்றாவது பத்தியில் பெற்றவர்கள் வளர்ப்பு என்பதில் எழுத்துப்பிழை...
ReplyDelete